நினைவுக் குளியல் 2
நினைவுக் குளியல் 2 வாசிப்பின் நெறிப்படுகை பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது. வளர்ந்தவர்கள் வாசிப்பில் காட்டும் சிரத்தை, அதன் ஆழ்நிலைத் தியானம்போன்ற சலனமற்ற இருப்பு, அவர்களது வாசிப்பு ஸ்திதியின் கவர்ச்சிகளென எதுவும் அதற்கு விசை கொடுத்திருக்கலாம். அனேகமாக, ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் பள்ளியில் பெரிய வகுப்பு படிக்கும் ஒரு அண்ணன் வயற்கரையை நோக்கி ஒரு பசுமாட்டைச் சாய்த்துக்கொண்டு, ஆறுதலான நடையில் புத்தகமொன்றை வாசித்தபடி ஒழுங்கையில் நடந்துபோவதை பலமுறையும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாசித்தபடி நடக்கும் வேகத்திற்கேற்ப பசுமாடு மேய்ந்துகொண்டு போகுமா, அல்லது, மாடு மேய்ந்தபடி செல்லும் வேகத்துக்குத் தக அந்த அண்ணன் நடப்பாராவென அறுதியாய்ச் சொல்ல என்னால் முடியாது. ஆனால் அது எனக்கு பெரும் வியப்பாக அப்போதெல்லாம் இருந்துகொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மலரக்கா வெய்யில் சாய்ந்த வேளையில் புத்தகமொன்றோடு கிணற்றடியில் சாய்ந்து நின்ற கொய்யா மர...